அந்தி மறையும் ஆனந்த வேளை...
ஆகயச் சூரியன் ஆழ்கடல் மீது செங்கதிர்களால் ஸ்பரிசம் செய்ய...
கடற்கரை தனில் நானும் தனிமையில்...
இறைவன் தந்த அருட்கொடையாம் இயற்கையை
(இ)ரசித்தவனாக இருக்கும் வேளை...
கரையை மோதும் கடல் அலைகளின் ஓசை என் காதோரம் ஏதோ சொல்ல முற்படுவது போல் தோன்ற...
என்னுள் உதித்தன சில வரிகள்...
தருகிறேன் கவிதை துளிகளாய்...
ஐம் பெரும் பூதங்கள்...
அறிவோம் நாம் யாவரும்...
ஐந்தென அவற்றை பிரிக்கக் காரணம்?
(ஐம்) பொறிகளும், புலன்களும் மானிடராம் நமக்குண்டு என்பதாலா?
“நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ”
எங்கே இன்னுமொன்று?
அது அழிந்து கொண்டு வருவதனாலா
அன்றே நம் முன்னோர் அதை கண்டு கொள்ளவில்லை?
அதுதான் “தாவரம்”
இயற்கை என்றாலோ நம் கண் முன் நிற்பவை...
பச்சை பசேல் என பளிச்சிடும் தாவரங்கள் தானே..
குளிர்ச்சியான ஆற்றங்கரையோரத்திலே...
இதமான தென்றல் காற்று வீச...
மரச் சோலையின்கீழ் சேலை விரித்து இளைப்பாரி...
அந்தி வானை ரசிக்க யாருக்குத்தான் ஆசையில்லை?...
தாவரங்கள் இன்றி இயற்கை ஒரு போதும் இயற்கையாக இருக்காது.
இயற்கைக்கு அழகு சேர்ப்பதே தாவரங்கள் தானே...
வறண்ட பாலை மண்ணை பார்த்து “அழகிய இயற்கை நிலம்” என்று கூறுவது அரிது...
நடுக்கடலிலே...
சுற்றும் முற்றும் நீர் சூழ்ந்திருக்க...
இயற்கையை நாம் ரசிப்பதரிது...
உலர்ந்த காற்று உஷ்ணமாய் உடம்பில் படும் போது...
காற்றை ரசிப்பதரிது...
பகல் பொழுதிலே.. சுட்டெரிக்கும் சூரியன் சுடரொளி வீசும் போது...
வானத்தின் அழகை ரசிப்பதரிது...
தீ என்றாலே சற்று தூரநின்ருதான் பார்க்கும் நாம் அதை இயற்கை என ஒப்புக்கொண்டதும் அரிது...
ஐம் பூதங்களில் அப்படி என்னதான் விஷேசம்... அவற்றின் பேரில் பூதம் சேர்ந்திருக்க?...
சற்று சிந்திக்க....
இவை இல்லாதவிடத்து, எதுவுமே வாழ முடியாது என்பது தெளிவு...
இவை மிகைக்குமிடத்து எல்லாமே “அழிவு” என்பதும் அறிவு...
இது அனுபவம் தந்த முடிவு...
“இயற்கை அனர்த்தங்கள்” ஐம் பூதங்களின் சீற்றமே என்பார்கள்...
இயற்கையின் அழுகைதான் அனர்த்தமாய் வெடிக்கிறது என்பதை அறியாதோர்...
பூமி பொறுமையிழந்தால் “நில நடுக்கம்”
நீர் பொங்கி எழுந்தால் “சுனாமி” மற்றும் “வெள்ளம்”
காற்றின் அத்துமீறல் “சூறாவளி”
ஆகாயத்தின் குமறல் “இடிமுழக்கம்”
அழிவுகளின் பயங்கரம் தீயால் வருவதுதான்... எச்சங்களைக்கூட விட்டுவைக்காது...
இவை நாம் காலா காலமாய் கண்டுவந்த உண்மைகள்.
இன்றைய கால கட்டத்தில்....
இயற்கை அழிவுகளின் இன்னுமொரு பரிணாமத்தை நாம் சிந்தித்ததுண்டா?
இயற்கைக்கு சவாலாகவும்...
இயற்கையே சவாலாகவும் மாறும் கொடுமை...
“தாவரங்களின் அழிப்பு”
மெய்ஞானம் வென்ற விஞ்ஞானம் கூறும் உண்மைகளுள் ஒன்றுதான் “உலக வெப்பமாதல்” (GLOBAL WARMING)
இதற்குப் பிரதான காரணம் “காடழிப்பு”
அழிவது காடு மட்டுமல்ல... முழு உலகும்தான்...
கொடிய விலங்குகள் என நாம் வகுத்த எந்த மிருகமாவது இயற்கையை அழித்ததாக அறிந்ததுண்டா?
ஆறறிவுடைய நாம் மிருகத்தை விடவும் கொடியவர்களோ?
காட்டை அழித்து...
நாட்டை பிடித்து...
வானைப் பிழந்து...
தீயால் எரித்து...
காற்றில் கலந்து...
நீரிலும் நிலத்திலும் வானிலும் கபடங்கள் செய்யும் கயவர்கள் கூட்டமா இந்த மானிடப் பிறவி??
நம்மை மகிழ்விக்கும் இயற்கையை மகிழ்விக்க நாம் என்ன செய்திருக்கிறோம்??
மனிதர்கள் வணங்கிட இயற்கையில் பல தெய்வங்கள் உண்டெனக் கூறும் நாம்...
நம்மை வணங்கிட இயற்கையிடம் நல்லபடி நடக்க வேண்டாமா??
............... இது கவிதைக்கு ஒரு முடிவாக இருந்தாலும், நம் சிந்தனைக்கு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும்.........
By: முகம்மட் நிப்ராஸ் I.L.
பொறியியல் பீடம்
பேராதனை பல்கலைக்கழகம்
+94-75-5483188
Nifty creations©
No comments:
Post a Comment